Friday 20 February 2015

 நங்கை நல்லூர் ஈசனை  நாடு
                                    மகஸ்ரீ.

தூங்கல் முகத்தானும் தூக்கிய வேல்பிடித்து
ஓங்குமலை நின்றானும் அங்கத்தில் – பாங்காக
மங்கைக்கு  பாதியுடல் பங்களித்த  ஈசனுறை
நங்கைநல்லூர் ஈசனை நாடு

கங்கைக் கரையோர காசிநகர் கல்கொண்டு
எங்குமுள்ள ஈசன் வடிவாக – லிங்கத்தில்
தங்குமிடம் கொண்டான் தலக்கணாஞ் சேரியெனும்
நங்கைநல்லூர் ஈசனை நாடு

வான்கதி ரோனும் வருணனும் போற்றிவர
மாண்பாய் அரசடிம கிழ்வோனை – தேன்பாக்கம்
மேன்மைமிகு  காஞ்சிமுனி சொல்லியே கோயில்கண்ட
நங்கைநல்லூர் ஈசனை நாடு

தொட்டவரும் மாதேவன்  தாள்பணியும் மற்றவரும்
கிட்டவந்து தேன்சொட்டும் கீதமுணர்  – இட்டமுடன்
விட்டகலா சக்திசிவம் வாழ்த்திடவே பாதம்பற்ற
நங்கைநல்லூர் ஈசனை நாடு

வாழுலக மெய்யுணர்வை வாழ்த்தியருள் நாதனொடு 
ஏழுலகம் சுற்றியவன் இங்குற்றானே – சூழுமறம்
தங்குதற்கு பாதையருள் செய்கின்ற  தேவனவன்
நங்கைநல்லூர் ஈசனை நாடு

அஷ்ட புஜத்தாளை அன்புசெய் ஆத்தாளை
இஷ்டவரம் தந்தெமை ஏற்பாளை – துஷ்டவினை
தங்கிடாது காப்பவளை சிந்தையில் ஏற்றிட
நங்கைநல்லூர் ஈசனை நாடு

கரங்குவித்து  போற்றி  கண்ணால்  காணுதற்கு
வரம்பெறும் நல்வழியே மார்க்கம் - சிரம்தாழ்ந்தேன்
எங்கும்   நிறைந்தெமக்கு    இன்பம் அளிக்கின்ற
நங்கைநல்லூர் ஈசனை நாடு

அவன்தந்த வில்வத்தால்  அர்ச்சித்து  நின்றால்
அவன்பாதம்  பற்ற அருள்வான்   – அவனருள்
தங்கிவிடும் நிச்சயமாய்  சீர்மிகு   சோதிஉரு
நங்கைநல்லூர் ஈசனை நாடு

பெண்ணுரு ஆணுருவாய்  பாரினிலே  காணுகின்ற
வெண்பொடி பூசிய மேனியனே – தண்மதியும்
கங்கையும் தாங்கியே காட்சிதரும் சோதியனாம்
நங்கைநல்லூர் ஈசனை நாடு

உடன்வாழும்  பெற்றோரும் ஒப்பில்லா மாதர்
உடன்பிறப்பு என்று  உரைப்பார்  – கடந்தநிலை
நீங்கிக் களிப்புறவே  நாமுணர்ந்து வாழ்வதற்கு
நங்கைநல்லூர் ஈசனை நாடு