Thursday 10 May 2018















ஆறாம் ஆண்டு
ஆனந்த வாழ்த்து


ஆல்போல் தழைத்து
நயத்திடும் நாளிதழ்
மேல்வழி நோக்கும்
மேன்மை அதன்வழி

அரசியல் உண்டு
உரசலும் உண்டு
பரந்து விரிந்த
பக்தியும் உண்டு

தெரிந்த செய்திகள்
தெரியா உண்மை
புரியும் வண்ணம்
விரியும் தகவல்

வாரா வாரம்
வாசகர் விவரம்
சீராய் கருத்து
சிறக்கும் பதிவுகள்

பாராட்டும் பண்பு
சீராட்டும் மகிழ்வு
நேரான வாய்மை
கூரான கருத்து

வரிக்கு வரிகள்
விளங்கும் வண்ணம்
விரிவாய் செய்தி
விளம்பும் எண்ணம்





ஈச நேசன் மகஸ்ரீ.



புரியும் வைத்தியம்
பாட்டியின் வழியில்
தெரிந்துக் கொள்ள
தெளிவாய் பதில்கள்

பழகும் குழகன்
பகிரும் அழகன்
வழக்கம் மாறா
வசந்தக் காற்று

முத்து கடற்கரை
வெற்றி மதியன்
சக்தியின் துணையால்
சாதனை படைப்போன்

ஆண்டுகள் ஆறும்
தாண்டிடும் நிலைத்து
நீண்டதோர் வளர்ச்சி
வேண்டிடும் எழுச்சி

தரமே தகுதி
வரவாய் வாழ்த்து
கரமே நீட்டி
சரமாய் மாலை

வாரச் செய்திகள்
வரும்நாள் மாறும்
சாரமாய் செய்திகள்
சடுதியில் தினஇதழ்



எனக்கென உதித்த மாது.

பாரப்பா பிறப் பிறப் பென்ப தெல்லாம்
    பரமனவன் செய்திட்ட விதிகள் தானே
ஊரப்பா எதுவென்று நாமறிய மாட்டோம்
    உணரும்வழி எவருமே சொல்ல வில்லை
உணரப்பா வாழ்க்கை உன்னால் இல்லை
    உதிப்ப துவும்எங் கென்றும் புரிவதில்லை
கேளப்பா முன்வினை தான்இந்த வாழ்க்கை
    கேடேதும் எண்ணாமல் வாழ்தல் நன்று

மாதப்பா எனக்காக முன்பிறந்தே பூவுலக
    மண்ணில்  எனை உதித்திடவே செய்திட்டாளே
ஏதப்பா காரணங்கள் எனவே கேட்டால்
    எவருக்கும் என்றைக்கும் தெரியக் காணோம்
உற்றசுற்றம் தனித்து எம்மை விட்டுப்போனார்
    உலகியலில் வாழ்தலுமே மிகத்  துன்பமாச்சு
மற்ற துணை அற்றுவிட  தன் வாசல்தாண்டி
    மற்றவர்கள் இல்லம் தன்னில் உழைக்கலானாள்
பற்றென்று அவள் மனதில் ஏதுமில்லை
    பாசம்காட்டி வளர்ப்பது தானவளின் எல்லை

ஏழ்மைஎமை வாட்டினாலும் உறவின் இல்லம்
    ஒருபோதும் அவள் நாடிச்  சென்றாள் இல்லை
தாழ்மைநிலை மாறஅவள் பட்டதுன்பத்
     தாக்கங்கள் கொஞ்சமில்லை சோர்வு இல்லை
ஆழ்கடலின் சிப்பிநீ  யென்று சொல்லி
    ஆண்மகனாய் எனையாக்கி வளர்த்து விட்டாள்
ஊழ்வினைதான் எங்கள்துன்பம் என்றிட்டாலும்
    ஊரார்முன் தலை நிமிரச் செய்தாள் அன்னை


கேளப்பா நாலாறு வயது தன்னில்
    பின்னுதித்த மங்கை நல்லாள் வந்து
ஒளியப்பா இல்லம் சூழவைத் திட்டாளே
    ஒன்றெனவே என்கரமாய் திகழுகின்றாள்
பாரப்பா இன்றுநிலை நலமேயாச்சு அப்
     பரமன் தந்தவழி சுகமேயாச்சு
கேளப்பா நல்லவழி செய்தோமானால்
     கேடுகள் நம்மைவிட்டு ஓடிப்போகும்
   




   



என்ன சொல்லி நானழைப்பேன்.
                                          ஈச நேசன் மகஸ்ரீ 13.02.2016

நாதாந்த பசுபதியே நவபதியே அதிபதியே
போதாந்த புண்ணியனே சிவனே சபாபதியே
வேதாந்த தத்துவமே வினையகற்றும் கதியே
மாதாந்த மாகிவிட்ட அற்புதமே ஒளியே

ஆடிடும் அந்தரத்[து] ஆதாரப் பெருமானே 
துடியாடும் செவிசேர்ந்த தோடாடும் சடையாடும்
கரமாடும் காலாடும் உடலாடும் உன்னுடலில்
அரவாடும் அனலாடும் மானாடும் மழுவாடும்

முப்புரி நூலாடும் கரிபுலி தோலாடும்
எப்போதும் இசையோடும் உமையோடும் நீயாடி
தப்பிலா பதமாடும் உடனாடும் பூதங்கள்
ஒப்பிலா மதியாடும் உலகாளும் பெம்மானே

கதியாகும் பதமே விதமறியா சுகமே
அதிபதி சிவபதி பசுபதி அருள்நிதி
சதிபதி எதுவென விதித்திடும் சுடரே
மதிமுக சிவமணி தவமணி வடிவே

தேருலா நீறுழல் முப்புறம் பாழ்பட
சீருலா மேவிடும் சிதம்பர ஆடலே
ஊருலா செய்துமே உருவலிங் கேசனே
காருமே க்ருண்ய ஈசனே போற்றினேன்

அகார உகார மகார தத்துவனே
நகார மகார சிகார வகார
யகார மந்திர தந்திர காரணனே
விகார  நகரா வினைபல தீர்ப்போனே

ஈசனே  நேசனே பாசனே மாசிலா
வாசனே வீசுலா காற்றே தீஞ்சுடரே
தேசமே தேசுலா விண்ணே சீவனமே
தாசன் நானுனை என்சொல்லி அழைப்பேனோ  !


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்
004.jpg008.jpg009.jpg010.jpg011.jpg012.jpg
       திருப்பரங்குன்றம்          திருச்செந்தூர்                     பழணி                    சுவாமிமலை                 திருத்தணி             பழமுதிர்ச்சோலை

 தமிழில் ஈச நேசன் மகஸ்ரீ.
[ எம்.ஜி.ஸ்ரீனிவாசன் ]

==000==
கணபதி வந்தனம்

எப்போதும் பாலகனே எவ்வினையும் தீர்ப்பவனே
கப்பிய கரிமுகத்தைப் பணிகின்ற சிங்கம்போல
முப்புர தேவர்களும் முகம்பார்க்கும் ஈர்ப்பினாலே
கூப்பியதும் மங்களங்கள் குவிக்கின்ற கணேசாபோற்றி           1

உள்ளம் உறைபவர்

கவிபோல சொற்பொழிவு கவியாலே சொல்லாட்சி
கவியாகும் இசைவடிவம் கண்டதில்லை என்மனமே
கதிர்போலே வீசும்ஒளி கந்தனவன் அருளாலே
உதிர்க்கின்ற எந்நாவின் உயிரோட்டம்  கவியாகும்.               2

வேதப்பொருள் வேலவன்

மயில்மீது அமர்கின்ற நால்வேத உருவே
பயில்தவ முனிமாதர் படர்கின்ற செயலே
உயிர்வேத பொருளான உமைநாத சிவனும்
உயர்வாக உன்முன்னே அமர்ந்திட்ட உலகே                      3
சரண் செய்ய காப்பவன் சண்முகன்

தன்முகம் காணின் முன் வினைகள் தீரும்
பின்வினைகள் வாரா பெருமைகளும் கூட்டும்
மண்அளையும் செந்தூர்க் கடலலையும் போற்றும்
வண்ணம் சூழ்முருக  உமைமகனே போற்றி                      4

பிணிகள் போக்கும் குகன்

அலைகளெலாம் கரைதொட்டால் மறைவது போலே
தலைவனவன் தரிசனத்தால் துன்பமெலாம் ஒழியும்
செந்தூரின் கடல்போலே தினம்பாதம் பணிந்தால்
வந்துழலும் துன்பங்கள் எந்நாளும்  வாரா                        5

வாழ்வில் சுகம் பெற

கந்தமலை யாகுகின்ற செந்தூர் மலையேறி
கந்தனைக் கண்டால் அதுகைலாய மாகும்
நிந்தனைகளற்ற வெள்ளிமலைபோலே இங்கு
வந்தனைகள் செய்தால் வாழ்வே சுகம்தானே                     6

முருகன் தரிசனம் சோகம் போக்கும்

பேரிரைச்சல் கொண்ட பேரலைகள் சூழும்
பேரின்பச் செந்தூர்  பேரிடர்கள் தீர்க்கும்
நேரினிலே சென்று முருகன்முகம் காண
பாரினிலே என்றும் படும்சோகம் தீரும்                           7

எண்ணங்கள் பூர்த்தியாக

சுட்டெரிக்கும் சூர்யனின் கோடிப் பிரகாசம்      
விட்டகலா வரங்கள்பல வழங்கிடும் நேசம்
பட்டுடல் நேர்த்தி பொன்வடிவ மூர்த்தி
இட்டமுடன் தொழ இன்பம்தரும் கார்த்தி                         8

இல்லறத் துயர் நீங்க

பிறவித் துயர்வாட்டும் மனமென்னும் வண்டு
உறவைத் தேடியே அலைகின்ற வகைபோல்
மறவாத உம்கருணை மலர்ப் பாதம்நாடி
பறந்தோடி வந்துநான் பக்திசெய்து நிற்பேன்                       9

இதயம் கொண்டால் இன்பம் வரும்

பொன்வண்ண தகதகப்பாய் ஆடைகள் ஒளிர
சன்னஒலி  யெழுப்பும் சதங்கைகளும் அசைய
நின்இடையில் ஒட்டியாணப் பட்டுகளும் கண்டு
என்இதயம் வைத்தே போற்றுகிறேன் கந்தா.                      10       

எதிர்ப்புகள் குறைய

குலமாது வள்ளியின் குங்குமப்பூ மார்பில்
சிலநேரம் உன்மார்பும் ஒன்றிவிட்டதாலே
செவ்வண்ணமாகி நிற்கும் செந்தூரின் வேலா
அவ்வரக்கன் தாரகனை அழித்தவனே போற்றி                    11

வழக்கில் வெற்றிபெற

தாரகன்சூரன் சிங்கமுக அசுரரை வதைத்தகரம்
பாரனைத்தும் லீலைகளால் காக்கும் பரமன்கரம்
பிரணவத்தை உணர்த்தி பிரம்மாவை தொட்டகரம்
அரவணைக்கும் பன்னிரு கரத்தானை போற்றுகிறேன்              12

வளம் பெருக

நான்காணும் உன்ஆறு நல்வதனத் திருமுகமும்
வான்முழுதும் நல்லஒளி மாசின்றி வீசிடிலோ
வான்வெளியில் மேகமிலா சரத்கால சந்திரனாய்
கான்ஒளி நிலவெனவே கந்தனைப் போற்றிடுவேன்.                13

புகழ் பெற

புன்னகை புரியும்பூக்கள் மலரென நாடும்வண்டு
சின்னதாய் கோவைவண்ண சுடரொளி காட்டும்
தன்னுண்மை உதடுக் கமலங்கள் ஆறுஎன்று                        
என்னுள்ளம் வைத்தே சண்முகனை போற்றுவேனே                14

பிரார்த்தனை பலிக்க

இருசெவி பரந்தருளும்  பன்னிரு விழிகளிலே
ஒருவிழி ஒன்றினாலே என்னைப் பார்த்தால்
வருங்குறை ஏதுநீ சொல்வாய்?  கந்தா நான்
அருள்வேண்டி உன்னயே வணங்கு கின்றேன்                       15
இறைவன் அருள் என்றும் நீடிக்க
                  
திருவதனம் ஆறினிலும்  உச்சிமோந்து சிவனாரும்
திருவாக்கால்  ஆறுமுறை வாழ்க என்றார்.
திருத்தலைகள் மேலணிந்த நவமணித் திருமுடிகள்
திருக்கோலக் காட்சிகண்டு தாள் பணிந்தேன்                        16

குழந்தைகள் உருவாக

ஒளிவீசும் உந்தனது எழிற்கன்னம் இடையினிலே
பளிச்சென்னும் பட்டாடை கரங்களிலே ஆயுதங்கள்
ஒளிமிகு கேயூரம் மணிமாலை குண்டலங்கள்
ஒளியூட்ட  உமையாளின் மைந்தனே காக்கவேண்டும்               17

குழந்தைகள் நலம் காக்க

இங்குவா எனக்கரம்நீட்டி அழைக்க உமையைவிட்டு
சங்கரன் தோளணைந்தாய்  மங்கள குமரனெனும்
தங்கமே பாலகுமாரா  உன்னை மனம்மொழிமெய்
அங்கத்தாலே போற்றியே வணங்கு கின்றேன்                       18

இல்லறம் சிறக்க

ஈசன்திருமகனே குமரனே தத்துவ இரகசியமே
பாசமிகு குகனே கந்தனே வேலாயுத மயிலோனே
சேனாபதித் தலைவ தாரகவதத் தோனேவள்ளி
மணாளனே எல்லாப் பொழுதும் எனைக் காப்பாய்                    19      

நோய் நொடிகள் அகல

பஞ்சேந்திரியங்கள்  செயலற, கபம்சூழ வாயில்
பஞ்சுவெண் நுரைகசிய அச்சமுற்று நடுநடுங்கி
மூச்சுமுட்டி பேச்சுகுழற  நினைவற்று நிற்கையிலே  
வீச்சுஒளி காட்டி ஆட்கொள்ள  குகனேநீவா                         20

மரண பயம் நீங்க

அச்சம்தரும் காலனின் தூதுவர்கள் எனைக்கண்டு
அச்சுறுத்தி வெட்டு பிளந்திடு வெந்தணலில் தள்ளு
என்கின்ற நேரத்தில்  சக்திவேலோடு மயிலேறி
என்முன்னே சுப்பிரமண்யா நீவந்து காக்கவேண்டும்                        21

ஆத்ம திருப்தி உண்டாக

உன்பாத கமலத்தில் பலகாலம் பணிந்திட்டேன்
என்முடிவு நேரத்தில் உயிர் நீங்கும் காலத்தில்
என்வாய் திறந்து ஏதும்பேசாத  நிலைவருங்கால்
முன்வந்து காத்திடுவாய் கருணைமிகு கடலே.                     22

மனத் துயர்கள் நீங்கிவிட

அகிலத்தின் பலவற்றில்  கொடுமைஆட்சி
முகித்திட்டான் சூரன்,தாருகன் சிங்கமுகன்
முன்சென்று அழித்தாயே அதுபோல மனத்துயரை
முன்வந்து  அழிக்கவல்ல கதிநீயே அருள்வாயே                   23

நீங்காத மன சஞ்சலங்கள் அகல
     .
எப்போதும் துயர்பட்டு பாரங்கள் சுமக்கின்றேன்
எப்போதும் என்மனதில் சஞ்சலம்தான் காண்கின்றேன்
எப்போதும் உந்தனைத்தான் யாசித்து நிற்கின்றேன்
எப்போதும் அது நீங்க பக்தியுடன் வேண்டுகிறேன்                  24

உடல் உபாதைகள் அறவே அகல

துன்பம்தரும் வலிப்பு குஷ்டம் காசம் தகிப்பு
குன்மம் மேகசுரம் பயித்தியம் வயிற்றுநோய்கள்
திருநீற்றால் நீங்கிப் போகும் பைசாச வகைகள்கூட
உருக்குலைந்தோடிப்போகும் தாரகன் அழிந்தவாறே                25

கண்தொடர்பான வியாதிகள் தீர

கண்களிலே கந்தன்ரூபம் செவிகளில் கந்தன்கீர்த்தி 
எண்ணத்தில் திவ்ய கீதம் முகத்தினில் தூயசாந்தம்
வண்ணமலர் கைகளிலே பாதமதில் சேர்ப்பதற்கே
எண்ணமே முருகசேவை அசைவெலாம் குகனேயன்றோ           26

உடல் வலிமை அடைய

பக்தி செய்யும் முனிவருக்கும்  மனிதருக்கும் உதவிடவே
சக்தியுள்ள தெய்வம்பல உலகத்தில் மெத்த உண்டு
சக்தியற்ற மானுடர்க்கும் தானே வந்து அருளுகின்ற
சக்திசிவ குகன்போலே பார்த்ததில்லை பார்த்ததில்லை             27
உறவுகள் மேம்பட

மனைவி மக்கள் இனியசுற்றம் நற்பசுக்கள்
அனைவருடன் உலகத்து ஆடவர்கள் பெண்டிர்கள்
அனைவருமே என்றும் இதயத்தில் இருத்திவைத்து
உனைபோற்றி சரணமுறச் செய்வாயே செந்தில் குமரா.            28

தொழிலில் ஏற்படும் துன்பங்கள் நீங்க

மிருகம், பறவை கொடுமைதரும் கொசுக்களின்
பெருந்துன்ப அச்சமதை உன்சக்தி வேல்முனை
துளைக்க நசிந்திடுமே துன்பங்கள் கிரவுஞ்ச
மலையாகிய மாயக் கிரனைவதம் செய்தவாறே                   29

குழந்தைகளுக்கான கவலை அகல

தன்குழந்தை குறும்புகளை மன்னித்து ஏற்பதுபோல்
உன்குழந்தை  நான்செய்யும் குற்றங்கள் பொறுத்திடுக
தேவசேனா நாதனே ஈசன் திருமகனே சுப்ரமண்யா
தரணிக்கு தந்தையெனில் நானுனக்கு மகவுதானே                   30

பற்றும் பாசமும் ஏற்பட

வணங்குகிறேன் வேதமென வந்த மயிலை
வணங்குகிறேன் சக்தியின் வடிவேல்தன்னை
வணங்குகிறேன் சேவல்கொடியை மாகடலை
வணங்குகிறேன் கந்தனைப்  பலமுறைகள்                       31

வாழ்வில் வெற்றிபெற

வெற்றிதரும் வடிவே வெற்றிதரும் பெரியோய்
வெற்றிதரும் ஒளியே வெற்றிதரும் கடலே
வெற்றிதரும் வண்ணம் விளங்கும் நல்உணர்வே
வெற்றிகளே என்றும் முக்திதரும் விளைவே                     32

எல்லா இன்பமும் தொடர

சுப்ரமண்ய கவிதை சுகம்தரும் வார்த்தை
இப்பதிகம் யாவும் பக்தியுடன்  படித்தால்
மனையாளும் மகவும் பொருளோடு அறிவும்
உனைச்சேரும்பாராய் கந்தனவன் காப்பான்                       33
                                              == o0o ==