Monday 10 October 2016



வாழ்வில் இன்பம்                            ஈச நேசன் மகஸ்ரீ.

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடி
இன்பம் இல்லா வாழ்வதனை நாடலாமோ
இன்பத்தை நுகர்ந்திடவே எண்ணம் கொண்டால்
இன்பமிலா துன்பத்தை உணர்தல் வேண்டும்

எத்தனை நம்வய தென்று எண்ணிடாதீர்
எத்தனை பேர் உந்தன் நட்பு எண்ணிப் பாராய்
எத்தனையோ வழிஉண்டு இன்பம் காண
எத்தனையோ வழிகாட்டும் நல்லோர் உண்டு

கரைசேரும் கரைசேரும் கடலாம் துன்பம்
கரம்சேர கரம்சேர களிக்கும் வாழ்வு
புறம்போகும் புறம்போகும் துன்பம் யாவும்
அறமாகும் அறமாகும் நல்லோர் அன்பு

வரமாக எதனையும் வேண்டல் வேண்டாம்
தரமான உரமாகும் நட்பின் சேர்க்கை
நரவாழ்வில் விரும்புவது வாழ்வில் இன்பம்

உரமாகும் மூத்தவரின்  வாழ்த்து தானே.
                    வாழ்வியல் நெறிகள்.

    மிகவும் மேன்மையான மனிதப்பிறப்பில் அந்த ஜீவனுக்கு ஆறு அறிவுகள். தன்னைத் தான் உணர்ந்து நெறிகளை கடைபிடித்து நல்லதொரு நிலையில் வாழ்ந்து மீளப் பிறவா நிலையெட்டுதலை மேற்கொள்ளுவதற்காக் முன்னோர்கள்  நாற்பது சம்ஸ்காரங்களை ஏற்படுத்தியுள்ளனர். சம்ஸ்காரம் என்பதற்கு [ ஸம் = நன்றாக காரம் = ஆக்குதல்  அதாவது  ஒன்றை நன்றாக ஆக்குதல் என்றே பொருள் தரும் }  காரண காரியம் என்பதும் இதன் தன்மையான  வார்த்தையே ஆகும்  எதையும் பக்குவப்படுத்தினால் மட்டுமே அதன் உபயோகம் நல்லதாக அமையும். அதைப் போலவே வாழ்க்கை நன்கு அமைய  இந்த வாழ்வியல் நெறிகள் உதவுகிறது.   அத்தகைய நாற்பது என்ன என்பதைப் பார்ப்போம்..

              கருவிலிருந்து உதிப்பது முதல் வாழ்நாளில் கடைபிடித்து கடைத்தேறுவது வரை செய்யவேண்டிய சம்ஸ்காரங்கள் நாற்பதும் ஒன்றன்பின் ஒன்றாய் அறிந்துக் கொள்வதுடன் அதன்படி அறநெறியைக் கடைபிடிக்க முயற்சிப்போம்.

1.கர்ப்பாதானம்     

         ஆண் பெண் சங்கமம்  இது காமம் அல்ல. ஐந்தறிவு போல புணருதல் மாந்தர் நிலையல்ல.  அடுத்து ஓர்  உயிருடலின் ஆக்கப் பணி.  இந்தப் பணி இல்லற தர்மம். இனிமையான மகிழ்வைத் தருவது.  பிறப்பு நல்லதாய் அமைய இதற்கான நேரம் கணிக்கப்பட்டு ஒன்றிணைய ஏற்பட்ட சடங்கும் சம்பிரதாயமும். சுக்கிலம் சுரோணித கலப்பு. ஆன்மா கருவரை உதயம். பின்னர் மாதம்தோறும் நிகழும் ருது கால முதல் 16 நாட்கள் கர்ப்பாதானத்திற்கான உகந்த காலமாகும்.

2.பும்சுவனம்

         கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதம் நிகழ்த்தப்படவேண்டிய நிகழ்வு. வயிற்றில் உருவாகும் உடல் மூன்றாம் மாதத்தில் ஆணா, பெண்ணா என நிலை மாற்றம் நிகழும். எனவே இந்த மூன்றாம் மாத நிகழ்வாக பும்சுவனம் என்னும் சடங்கு செய்யப்படுகிறது. ஆண் மகவாக உருவாக இயற்கையின் துணை நாடுதல். ஆலம் மொட்டு கொண்டுவந்து நசுக்கி சாற்றினை கர்ப்பிணியின் வலது மூக்கில் சாற்றைப்பிழிதல். இதனை கர்ப்பவதி மூக்கில் ஏற்று உறிவதால் ஆண்சிசு உருவாகும் தன்மை அதிகரிக்கிறது.

3.சீமந்தோந்நயனம்.

       கர்ப்பிணியின் ஆறு அல்லது எட்டாம் மாதம் நடைபெறும் சடங்கு. பன்றி முள் கொண்டு சிரசின் வகிட்டில் மெல்ல கீறியவாறு மேல் நோக்கி கோடு இழுத்தல். இது அவளின் கணவனால் அதற்கான மந்திரம் கூறி செய்யப்படும். இது கர்ப்பிணியிடம் தெளிவான சிந்தனை உருவாகும். அச்சிந்தனை சிசுவின் வளர்ச்சியில் நலம் சேர்க்கும்.

4.ஜாதகர்மம்.

      குழந்தை பூவுலகம் காணப் பிறந்தவுடன் தானங்கள் அளித்தல் அவசியம். உழவுதான் உணவைத் தரும் என்பதால் விதை தானம் அதாவது நெல்தானியம் தானமாக அளிக்கப் படுவது சம்பிரதாயம்.  ஓடும் ஆற்று நீரில் உளம் களிக்க சிசுவின் தந்தை குளித்தல். பின்னர். பிறப்பின் நேரம் நட்சத்திரம் குறித்தல்.

5.நாமகரணம்.

     குழந்தை பிறந்த பதினோராவது நாள் குழந்தையை தந்தை தனது மடியிலிருத்தி பிறப்பு நட்சத்திரத்தையொட்டி பெயரிடல். முன்னோர் மற்றும் இறைவனின் பெயராக தேர்ந்தெடுத்து பெயரிடல். என் உயிரும் அன்னையின் உடலும் கலந்து உருவான உன்னை உலகத்தார் அறிந்து அழைக்க இப்பெயரை இடுகிறேன் என்று கூறி மகிழும் தினம்.

உப நிஷ்க்ரமணம்.
   
      குழந்தைபிறந்த நான்குமாதம் வரை இல்லத்திற்குள் இருக்க வைப்பதால் சூரிய ஒளி குழந்தையின் பேரில் படுமாறு செய்யும் சம்பிரதாயம். ஒளி அதிகமாக குழந்தை உணாராது மெல்ல மெல்ல அதற்கான நிலை உருவாக்குதல். சந்திர ஒளி காட்டல், ஆலயம் செல்லல்.

6.அன்னப்ராசனம்
         ஐந்து மாதம்வரை பால் அருந்தும் பாலகன் உணவு உண்டு வளர ஆயத்தம் செய்தலே அன்னப்ராசனம் ஆகும், உணவை அதற்கான மந்திரம் தந்தைசொல்லி  உணவூட்டும் நிகழ்வு இது.  [ நெய் + பால் + தயிர் + தேன் + அன்னம் கலந்த உணவு ஊட்டுதல். ]

          காது குத்துதல் :   ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் காது குத்துதலும் முதலாம் ஆண்டில் ஆயுஷ் ஹோமமும் செய்தல் ]

7.செளளம்.

         குழந்தையின் மூன்றாவது வயதில் அவரவர் குல ஆச்சாரப்படி சிகை திருத்தம் செய்தல், மொட்டை அடித்தல் எனும் முண்டனம் செய்தல்.

8.உபநயனம்                

        ஆண்குழந்தைகளுக்கானது.  பிறந்த எட்டாவது வயதில் 7வருட பூர்த்தியாகி இரண்டு மாதம் கழித்து மூன்றாம் மாதம் துவங்கியதும் முப்பிரி நூலணிதல். இது உப நயனம் எனப்படும். இது முதல்  பிரம்மச்சரியம் என்னும் நிலை துவக்கம். [ காமம் நுழையுமுன் காயத்ரி மந்திரம் ஏற்பது.]  உப என்றால் துணை  நயனம் என்றால் அழைத்துச் செல்லல். அதாவது ஆச்சாரியாரிடம் வேதம், மற்றும் பிற பயிற்சிகள் பெற சேர்ப்பித்தலுக்கான தகுதியாக்குதல். உத்திராயண காலமான   தை முதல் ஆனி மாதம் வரை இதற்கு ஏற்ற காலமாகும்.

        ஆவணி அவிட்டம் என்பது உப நயன கால வேத ஓராண்டு எனக் கருதல் வேண்டும் கற்ற காயத்ரி மந்திரம் முழுமையாக பயன் படுத்தத் தெரிந்தவனாய் மாறுதல். இதை நினைவு மறுசுழற்சி பயிற்சி எனலாம். அதேபோல உத்ஸர்ஜனம் என்னும் வேதபாட நிறைவும் செய்யப்படவேண்டும்.

குருகுலவாசம்

      iஇது அந்தகால கல்விமுறை  வேதம் என்பது, அறிவு, ஆற்றல், விஞ்ஞானம்  வித்தைகள் ஆகிய ஒரு அற்புத கல்விமுறை  இவற்றைக் கற்பிக்க ஆசான் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் அனுப்பிவைத்தல். அங்கே ப்ரஜாபத்ய காண்டம், ஸெளம்ய காண்டம், ஆக்நேய காண்டம், வைஸ்வதேவ காண்டம் என்ற நான்கு பகுதிகள் உண்டு.. பிரம்மச்சரிய காலத்தில் வாசனை திரவியங்கள், வண்ண ஆடைகள் உபயோகிக்க அனுமதியில்லை.  வேத அத்யாயனம் என்ற கல்வி முடிந்ததும் ஆச்சாரியரின் அனுமதியென்னும் அனுக்ஞை பெற்று ஸமாவர்த்தனம் செய்தல் அவசியமாகிறது,. ஸமாவர்த்தனம் [ வேதப்பயிற்சி நிறைவு ]  முடித்து அடுத்த ஆஸ்ரம வாழ்க்கையான கிரஹஸ்தாஸ்ரமம் நுழைதல்


9.ப்ரஜாபத்யம்
      ஆச்சார்யருக்கான பணிவிடை, அரச நியதிகள் தொடர்பாக அறிதல்

10.ஸெள்ம்ய காண்டம்
       சாந்தம், அழகொடுக்கம், சிற்ப சாத்திரம், ருத்ர விளக்கம் ஆகியன அறிதல்

11.ஆக்னேயம்
        அக்னிபற்றிய அறிவு., அக்னியின் தன்மை., அக்னி வழிபாடு, சிவாகமத்திலொன்று. இது பற்றிய விளக்கத்தைப் பூரணமாய் அறிதல்

12. வைஸ்வதேவம்
          வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்கள் நீக்க பரிஹாரமாக செய்யப்படும் ஹோமம் வைஸ்வதேவம் எனப்படும்        
                   
 
13.ஸமாவர்த்தனம்

    வேதம் யாவும் கற்றுணர்ந்தபின் ஆச்சாரியரிடமிருந்து விடைபெறுதல். மங்கலப் பொருள் தரித்தல், வாசனை திரவியம் ஏற்றல், எண்ணெய் தேய்த்து குளித்தல், உயரிய ஆடை உடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்கத் துவங்குவதற்கான அனுமதிபெறல்.

14. விவாஹம்

     விவாஹம் என்பதில் உத்வாஹம், பாணிக்கிரஹணம், கன்யாதானம், கல்யாணம் என முறைகள் உண்டு. கிரஹஸ்தாஸ்ரமம் என்னும் குடும்ப நிர்வாக அமைப்பை ஏற்றல் ஆகும். ஆண் தனக்கு உதவியாக வாஞ்சை, பிரியம், தோழமை, தர்ம நியதி கொண்ட பெண்ணை துணைவியாக்கிக் கொள்ளுதல். ஆணுக்கிருக்கும் தர்மநியதிகள் பெண்ணுக்கும் உண்டு என்பதால் தர்மத்தை கடைபிடிப்பதில் இருவர் பங்கும் இணையும் என்பதால் சகதர்மினீ என மனைவியை அழைத்தனர்.
  
     ருதுவானபெண்ணை அல்லது ருதுவாகும் நிலையில் உள்ள தனது பெண்ணுக்கு நல்ல வரன் தேடி திருமணம் செய்வது பிரஜாபத்யம் எனப்படும்.அதாவது தாம்பத்யம் மூலம் பிரஜைகளை  உருவாக்கல் என்பதாம். 
அதுவுமின்றி மகா யக்ஞம்., பாக யக்ஞங்கள் செய்வதற்கு திருமணமான வர்களுக்கே தகுதியாகும்.

மகா யக்ஞங்கள்  [5]
      மேற்கூறிய  வைஸ்வதேவம் போலவே தினசரி செய்யவேண்டிய கர்மாக்களில் இந்த மகா யக்ஞமும் அடங்கும்.

15. தேவ யக்ஞம்
       இது வைஸ்வதேவத்தின் ஒருபகுதி எனலாம். அக்னியில் செய்யப்படும் இந்த ஹோமம் தேவ ஆன்மாக்களுக்கு [ மனிதராய்ப் பிறந்து முக்திபெற்று தேவராய் வாழும் தகுதிபெற்றோருக்காக ] செய்வதாகும். இத்தேவர்கள் கட்டுப்பாட்டில் காற்று, நீர், நெருப்பு, ஒளி ஆகிய இயற்கையின் பலன்களை நமக்கு சாதகமாக கிடைக்கச் செய்வர்.

16 பித்ரு யக்ஞம்
        பித்ருக்கள் திருப்திபெறவேண்டி செய்யப்படும் தர்ப்பணம் பித்ரு யக்ஞம் எனப்படும்  தினமும் செய்யப்படவேண்டியது என்றாலும்  அமாவாசை, கிரகண தினங்கள், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப்பிறப்புகளில் இத்தர்ப்பணங்கள் செய்தல் வேண்டு, தேவலோகம் அடையாது பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்களின் திருப்திக்கு செய்யப்படுதல் ஆகும் இதனால் பித்ருக்கள் நன்மைகளை நமக்கு உருவாக்கித் தருவர்.

17 பிரம்ம யக்ஞம்
          இது வேத சாரத்தின் மூலத்தை சுருக்கமாக கடைபிடித்தல் ஆகும். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் ஆகியோருக்கு அர்க்கிய முறையில் [ நீர் விடல்] வேத மந்திரத்தால் தர்ப்பணம் செய்தல்.  சந்தியாவந்தனம் உட்பட இந்த பிரம்மயக்ஞமும் தினசரி கடைபிடிக்கப்பட்டால் ரிஷிகள் மகிழ்ந்து நற்பலன் கூட்டுவர்.


18.பூத யக்ஞம்.
        இதுவும் வைஸ்வதேவத்தில் ஒன்றேயாகும். விலங்குகள், பறவைகள், ஜந்துக்கள், பூதங்கள் ஆகியவற்றின் ஆன்மாக்களுக்கு அன்னம் அளித்தல் என்ற யக்ஞமே பூதயக்ஞமாகும்.  இதை மிகவும் சுருக்கி இக்காலத்தில் காகம், பசு, நாய்,, எறும்பு முதலியவனவற்றுக்கு மட்டுமே உணவளிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  நகரத்தில் இது முற்றிலும் அழிந்துவிட்டதாகவே காண்கிறோம். எறும்புக்கு அரிசிமாவால் கோலமிடல் அறவே நீங்கிவிட்டது. ஸ்டிக்கர் கலாசாரம் வந்துவிட்டது..

19. நிரு யக்ஞம்
           நிரு என்பது மனுஷ்யம் என்பதாகும். விருந்தோம்பல் என்னும் அதிதி பூஜை, ஏழ்மை, துன்பம், தேவை ஆகியவைகள் கொண்டவர்களுக்கு செய்யும் தான தர்மங்கள் இதுவாகும். வேதம் கற்றோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக செய்வது ஆகும் இறையடிய்டார்கள் என்னும் தகுதியை இது எட்டுவிக்கும். இதனை கடைபிடிப்போருக்கு மற்றவர்கள் சொல்லும் வாழ்த்துக்கள் மூலம் நலம் கிட்டும்.,

     பிரதியொருவரும் நான்குவிதமான ஆஸ்ரம தர்மத்தில் ஒன்றை கடைபித்தல் அவசியம். 1. பிரம்மச்சரியம் 2. கிரஹஸ்த்தம் 3. வானப்பிரஸ்த்தம், 4. சன்னியாசம் என்பதே அந்த ஆசிரம வாழ்வு ஆகும்.     
                

     இந்த 19 யக்ஞங்கள் தவிர மற்றும் 21 யக்ஞங்கள் வாழ்வில் கடைபிடித்தல் வேண்டுமென வகுத்துள்ளனர்.  அவைகள் பாகயக்ஞங்கள் ஏழு. ஹவிர் யக்ஞங்கள் ஏழு.,  சோம யக்ஞங்கள் 7 என 21 யக்ஞங்கள். அவைகள் பற்றியும் அறிவோம்.

பாகயக்ஞங்கள்:  [paaka yagnjam]  சிறிய யாகம் எனும் பித்ரு தர்ப்பண வகையாகும் மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்குமாதமும் பிரதிமாதம் ஸப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் செய்யப்படுவது ஆகும் இது அபர காரிய வகையுமாகும்.

1.அஷ்டகை :  தேய்பிறை அஷ்டமியில் பித்ருதர்ப்பணம் அஷ்டகா எனப்படும் அன்று பிராமணபோஜனம் குறைந்தபட்சம் நால்வருக்கு செய்வித்தல் வேண்டும் மறு நாள் நவமியில் செய்யப்படுவது அன்வஷ்டிகையாகும்.


2. ஸ்தாலீபாகம்     ஒளபாஸன அக்னியில் உணவு தயாரிக்கும் பாத்திரத்தை [ஸ்தாலீ] வைத்து சரு என்னும் கஞ்சி வடிக்காத  அன்னம் செய்வது ஸ்தாலீபாகம் ஆகும். இந்த அன்னத்தால் செய்யப்படும் ஹோமமே ஸ்தாலீபாக யக்ஞமாகும். :  

3. பார்வணீ.    இது மாதம் ஒருமுறை செய்யப்படுவதால் மாஸிக ஸ்ரார்த்தம் எனக் கூறப்படுகிறது. பார்வணம் என்பது ஒவ்வொரு பர்வாவிலும் செய்யும் ஸ்தாலீபாகமேயாகும்.

4.ச்ராவணீ     ஸ்ராவண மாதமாகிய ஆவணியில் பெளர்ணமி இரவில் சருவாலும் நெய்யாலும் ஹோமம் செய்து புரச புஷ்பங்களைக் கொண்டுபூசை செய்து புற்றின் அருகிலோ அல்லது சுத்தமான வெளியிலோ பச்சரிசி மாவால் கோலமிட்டு அரவ மந்திரம் சொல்லி பலிபோடுதல் ஸ்ராவணீ யாகும் ஆவணி  பெளர்ணமியில் தொடங்கி மார்கழி பெள்ர்ணமி வரை விடாது செய்ய வேண்டும்.

5.ஆக்ரஹாயணீ    ஆக்ரஹாயணீ என்பது மார்கழி மாதத்தின் பெயர் ஆகும் ஆவணி மாதம் தொடங்கிய சர்ப்ப பலியை மார்கழி மாதம் பெளர்ணமியில் பூர்த்திசெய்தலே ஆக்ரஹாயணீயாகும்.  மார்கழியில் உற்பத்தியாகும் சம்பா அரிசிகொண்டு அன்னத்தால் இப்பலி செய்து முடிப்பார்கள்.

6.சைத்ரி      சைத்ரி என்பது சித்திரைமாதத்தைக் குறிக்கும். நான்கு வீதிகள் கூடுமிடத்தில் ஈசானனை உத்தேசித்து. செய்யும் பலியாகும். ஈசானன் என்பது சிவபெருமானைக் குறிக்கும். சிவனுக்கே நேரிடையாக செய்வதால் இது ஈசான பலி என்றும் கூறுவர்.

7.ஆஸ்வயுஜி      ஐப்பசி மாதத்தில்  செய்யப்படுவதால் இம்மாதத்தின் பெயரான ஆஸ்வயுஜி என்றே அழிக்கப்படுகிறது. ஐப்பசியில் விளையும் குறுவை நெல் அறுவடை செய்து யக்ஞம் செய்த பின்னரே அன்னம் புசித்தல் செய்யப்படும்.   

     மேற்படி பாக யக்ஞங்கள் யாவும் பிறர் துணையின்றி தம்பதிகள் மட்டுமே செய்யக்கூடியது.  இதற்கென ரித்விக்குகள் [ புரோகிதர்கள் ] எவரும் கிடையாது.


ஹவிர் யக்ஞம்.
    
          . அக்னியில்   நெய்விட்டுச் செய்தும், நெய்கலந்த அன்னத்தாலும் செய்யும் இந்த யக்ஞம் ஹவிர் யக்ஞமாகும் ஹவிஸ் என்பது நெய் கலந்த அன்னத்தை குறிக்கும். இந்த யாகம்  பாக யக்ஞத்தைவிடப் பெரியதாகத் தோன்றும் யக்ஞம் ஆயினும் அடுத்து சொல்லப்படும் சோம யக்ஞத்தைவிட சிறிய அளவானதே ஆகும். இந்த ஏழு ஹவிர் யக்ஞங்களும்  நடத்தித் தர நான்கு ரித்விக்குகள் உண்டு, அவர்கள் ஹோதா, அத்வர்யூ, அக்னீதரன், பிரம்மா எனப்படுவர். அவர்களால் உரியதான மந்திரம் சொல்லப்பட்டு செய்துவைக்கப்படும்.

      1.அக்னியாதானம், 2.அக்னிஹோத்ரம், 3தர்சபூர்ணமாசம், 4.ஆக்ராயணம் [சாமை என்ற தானியத்தால் செய்யப்படுவது ]  5.சாதுர்மாஸ்யம், [நான்குமாதமும் ஒரே இடத்தில் தங்கி செய்யும் யக்ஞம். 6,நிருட பந்தம் எ  [ பசுவை கட்டிவைத்து செய்யும் யக்ஞம் ] 7.செளத்ராமணி  இந்த ஏழில் முதல் இரண்டு தவிர மற்ற யக்ஞங்கள் ஆண்டுக்கு ஒருமுறை செய்யவேண்டியது ஆகும்.

சோம யக்ஞம்
          40 யக்ஞங்களில் கடைசி  ஏழு எனப்படும் சோம யக்ஞங்களில் சாமவேத கானங்கள் இசைக்கப்படும். இந்த சாமகான இசையின் உச்சத்தில் அனைவருக்கும் தேவர்களை நேரில் கண்ட பரவசம் உண்டாகும்.  நான்கு புரோகிதர்களும் அவர்களுக்குத் துணையாக ஒருவருக்கு மூவர் என்ற விகித்த்தில் 12 துணையாளர்களும் ஆக 16 ரிக்வித்துகள் யக்ஞம் செய்துவைக்க இருப்பார்கள்.  இந்த யக்ஞம் வாழ் நாளில் ஒருமுறை செய்யக்கூடியது ஆகும்.  அதிகமான சிலவுகள் செய்தால் மட்டுமே இந்த ஏழு யக்ஞம் செய்ய இயயலுமென்பதால் ஏறக்குறைய கைவிடும் நிலையிலேயே இது உள்ளது.

1 .ஜ்யோதிஷ்டோமம் என்னும் அக்னிஷ்டோமம்  2.  அத்யக்னிஷ்டோமம்  3. உக்த்யம் 4 ஷோடசி 5. வாஜ்பேயம் 6. அதிராத்ரம்  7. அப்தோரயாமம்.

மேலே குறிப்பிட்டவற்றில் வாஜ்பேயம் என்ற யக்ஞத்தில் அன்னமே ஜலவடிவில் அபிஷேகிக்கப்படும்.  இந்த யாகத்தால்  நல்ல தானிய அபிவிருத்தியையும்  நீர்வளத்தையும் ஏற்படுத்தி தரவல்லது.

       இப்படி நாற்பது சம்ஸ்காரத்தில் நம்மால் முடிந்த சம்ஸ்காரங்களை கடைபிடிப்பதால் நல்ல பலன் கிட்டும் என்பதை உணர்வோமாக.

                 இறையருள் கூடட்டும்    இல்லறம் செழிக்கட்டும்.


      

சிவபெருமானின் அற்புதமான 108 தாண்டவங்கள் இதுவரை வெளிவராத தகவல்கள்108 கரணங்களுக்கான படங்கள் அதற்கான விளக்கங்கள் சிவனின் 64 திரு வடிவங்கள், கடைபிடிக்கவல்ல முத்திரைகள்

,முனைவர் குமரிச்செழியன், பாரதிபித்தர் எதிரொலி விசுவ நாதன்,  சிவனடியார்கள் திரு K.S. சுரேஷ்குமார்  திரு கோவிந்தன் மற்றும் நல்லாசிரியர் அரிமா முரளீதரன் ஆகியோரின் அணிந்துரைகளுடனும்.  நடனம் கற்போருக்கு பயனுள்ளதாக இருக்கும் விவரங்களுடனும் வெளி வந்துள்ள நூல். வாங்கிப் படியுங்கள்.              விலை ரூ.170/ மட்டுமே.


சென்னை மடிப்பாக்கம் சிவ நேயப் பேரவையின் 2016ன் நான்காம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

            திருப்புகழ் திலகம் மதிவண்ணன் அருண கிரியாரின் மகாமந்திர பூஜையுடன் விழா துவங்கியது.  திருமதி அம்சினி வைத்தீஸ்வரன் இறைவணக் கத்திற்குப்பின் திருமதி ஆனந்தி ஸ்ரீராமனின் வரவேற்பும் பவானி அப்பரடியார்கள் சிவ நெறி வழிபாட்டுத் திருக்கூட்டம் விசயமங்கல சிவனடியார் .வேலுச்சாமி அவர்கள் சிறப்புறை நிகழ்த்தினார்கள்.,  அன்னம் பாலிப்புக் குப்பின்னர் செல்வி அட்சராசாய், யோகினி, சஞ்சிதா மற்றும் அன்னை நாட்டியாலயா குழுவினரால் நடன நிகழ்வு நடந்தது

         ஜகத்குருபரமஹம்ஸ ஸ்ரீ பரத்வாஜ ஸ்வாமிகள் 21 அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி அருளாசிகள் வழங்கினார்.  சிவ நேயப் பேரவைத்தலைவர்  ஈசநேசன் மகஸ்ரீ நன்றி நவில விழா வைபவம் இனிதே நறைவுற்றது.